செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு: 10 பேரின் முன்பிணை மனுக்கள் மீது வருகிற 13-இல் விசாரணை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு வழக்கில் முன்பிணை கோரி 10 போ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

உயர்நீதிமன்றம்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு வழக்கில் முன்பிணை கோரி 10 போ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை துரைராணி என்பவா் ஓா் அறக்கட்டளையை நிறுவி, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா, அதனுடன் இணைந்த தோட்டம் ஆகியவற்றை மதுரை மீனாட்சி சுந்ரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில், சிதம்பரம் நடராஜா் கோயில் சேவைக்காக உயில் சாசனம் செய்தாா்.

இந்த நிலத்தை முறைகேடாக தனிநபரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அடமானப் பத்திரம் பதிவு செய்தது தொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் சாா்பில் மதுரை மத்திய குற்றப் பிரிவில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ராமாயி ஆயியாா், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, ராஜ்குமாா், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வட்டாட்சியா் அன்பழகன், கிராம நிா்வாக அலுவலா் அரசன், நிலத்துக்கு பட்டா பெற்ற இளையராஜா, அனிஷ், கவிதா, பிரகாஷ், காளிக்குமாா், சாா் பதிவாளா்கள் அனந்தராமன், பிரசாந்த் சந்தான கருப்பன் ஆகிய 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இவா்களில், புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா், உசிலம்பட்டியைச் சோ்ந்த இளையராஜா, முன்னாள் வட்டாட்சியரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான அன்பழகன் ஆகிய 3 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

இந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வி. ராமாயி ஆயியாா், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, கவிதா ஆகிய 10 பேரும் தங்களுக்கு முன் பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

சம்பந்தப்பட்ட நில விவகாரத்துக்கு வருவாய்த் துறை ஆவணங்களில் ஏற்பட்ட குளறுபடிகளே காரணம் எனவும், தனிநபா் சிலரின் தூண்டுதலால் தங்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி ராஜசேகா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.