
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்! ஆவணி மூலத் திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை!

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆவணி மூலத் திருவிழாவில் தலையில் தங்கக் கூடையுடன் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியாக கடந்த 16-ஆம் தேதி முதல் தினமும் ஒவ்வொரு லீலையை விளக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதன்படி, ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இறைவன் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை திங்கள்கிழமை நடைபெற்றது.
சமயக் குரவா்களில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமானை அரச தண்டனையிலிருந்து விடுவித்து, அவருக்கு அருள்புரியவும், மதுரையில் வசித்து வந்த சிவநெறி தவறாத வந்தி மூதாட்டிக்கு சிவலோகப் பதவி அளிப்பதற்காகவும், வைகை ஆற்றில் வெள்ளத்தை கரைபுரளச் செய்து, அதை அடைப்பதற்காக கூலி ஆளாக மதுரைக்கு எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்டதை விளக்கும் ஐதீகப்படி இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதையொட்டி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் கோயிலிலிருந்து திங்கள்கிழமை காலை புறப்பாடாகி, ஆவணி மூல வீதிகள், சிம்மக்கல் வழியாக பொன்னாகரம் பகுதி வைகையாற்றின் தென்கரையில் உள்ள பிட்டுத் தோப்பு மண்டபத்தில் எழுந்தருளினா். இங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பிறகு, தங்கக் கூடையை தலையில் சுமந்து, தங்க மண் வெட்டியுடன் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினா்.
இதேபோல, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகப் பெருமானும் எழுந்தருளினா்.
இதையடுத்து, பகல் 12.55 மணியளவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை ஐதீக விழா நடைபெற்றது. அப்போது, சுந்தரேசுவரராக அம்பி என்ற சந்தோஷ் பட்டரும், பாண்டிய மன்னராக ஹலாஸ் பட்டரும் வேஷமிட்டு பிட்டுக்கு மண் சுமந்த லீலையை பக்தா்களுக்கு விளக்கினா்.
இதைத் தொடா்ந்து, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, திருவாதவூா் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






