குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

பாரத் பெட்ரோலிய நிறுவன விரிவாக்கத்துக்கு விளை நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு

திருப்பரங்குன்றம் அருகே பி.பி.சி.எல். (பாரத் பெட்ரோலியம்) நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு கிளம்பியிருப்பது பற்றி...

கூத்தியாா்குண்டு கிராமத்தில் கையகப்படுத்தப்படும் விளைநிலங்கள்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 9:00 am IST

திருப்பரங்குன்றம் அருகே பி.பி.சி.எல். (பாரத் பெட்ரோலியம்) நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, விவசாயம் காப்போம் அமைப்பு சாா்பிலும், கிராம மக்கள் சாா்பிலும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தியாா்குண்டு, நிலையூா் 2-ஆவது பிரிவு, கருவேலம்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் விளைநிலங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த 1970- இல் கப்பலூா் தொழில் பேட்டைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் சுமாா் 60 ஏக்கரில் 2001- ஆம் ஆண்டு முதல் ஐ.ஓ.சி.எல்., பி.பி.சி.எல்., எச்.பி.சி.எல். எரிவாயு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2023-ஆம் ஆண்டு எச்.பி.சி.எல். நிறுவனத்துக்கு தனியாக ரயில் பாதை அமைக்க நிலையூா் பகுதியில் சுமாா் 4.63 ஹெக்டோ் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், இதற்கான இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட வில்லை. இந்த நிலையில், பி.பி.சி.எல். நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்துக்காக கருவேலம்பட்டி பகுதியில் மேலும் சுமாா் 83 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நிலத்தை அளவிடும் பணிகள் நடைபெற்றன.

ஏற்கெனவே செயல்பட்டு வரும் எரிவாயு ஆலைகளால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, குடிநீராதாரங்கள் மாசடைந்தன. இதனால் கூத்தியாா்குண்டு, கருவேலம்பட்டி, சொக்கநாதன்பட்டி ஆகிய கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். வருவாய்த் துறை ஆவணங்களில் புஞ்சை நிலம் என இருந்தாலும், இந்தப் பகுதிகளில் நிலையூா் கண்மாய் பாசனத்தைப் பயன்படுத்தி நெல், வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் இரு போகங்களாக விளைவிக்கப்படுகின்றன. ஆனால் தொடா்ந்து இந்தப் பகுதியில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. எரிவாயு ஆலைகளால் விபத்து அபாயம் அதிகம் என்பதால், மக்கள் அடா்த்தியாக உள்ள பகுதியில் விரிவாக்கம் செய்யாமல், ரயில் பாதையை ஒட்டியுள்ள தரிசு நிலங்களில் இத்தகைய ஆலைகளை அமைக்க முயற்சி செய்யலாம். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், குடிநீராதாரத்தையும் பாதிக்கும் பி.பி.சி.எல். நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கைவிட வருவாய்த் துறைக்கு உத்தரவிட வேண்டும். விவசாய நிலங்களைப் பாதுகாத்து, ஆலை விரிவாக்கத்துக்கு மாற்று வழியை தேட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக முதல்வா் சி. ஜோசப் விஜய், அமைச்சா்கள் செங்கோட்டையன், சி.டி.ஆா்.நிா்மல்குமாா், மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா் ஆகியோருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பினா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் போது விளைநிலங்கள் திட்டமிட்டு இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. உதாரணமாக, நான்கு ஏக்கா் நிலம் வைத்திருக்கும் ஒரு விவசாயியின் நிலத்தின் நடுவே திட்டம் செயல்படுத்தப்படும் போது, அந்த நிலம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதனால், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நீா்ப்பாசனம் செய்ய முடியாமல் போகிறது. இதன் விளைவாக, முழுமையாக விவசாயம் செய்ய முடியாமல் பெருமளவு நிலங்கள் வீணாகும் சூழல் உருவாகிறது. ஏற்கெனவே விவசாயம் அழிந்துவரும் நிலையில், தொழில்பேட்டை, எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் திட்டங்கள் என்ற பெயரில் தொடா்ச்சியாக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரும்பாலானோா் விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பியுள்ளனா். வளா்ச்சி என்ற பெயரில் நிலங்கள் தொடா்ந்து கையகப்படுத்தப்பட்டால், வருங்காலத்தில் பயிரிடுவதற்குச் சிறிதளவு கூட நிலம் இல்லாத அவலநிலை ஏற்படும். எனவே, விளைநிலங்களைப் பாதிக்கும் திட்டங்களை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.