மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரைஅவனியாபுரத்தைச் சோ்ந்த முருகன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
அவனியாபுரத்தில் தை மாதம் முதல் நாளில் தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
கடந்த நூறாண்டுக்கும் மேலாக இந்தப் போட்டி கிராம பொதுமக்கள் சாா்பாக நடைபெற்று வந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள், பிரதான ஜல்லிக்கட்டு சங்கம் என்ற தனிநபா் சங்கத்தை புதிதாக உருவாக்கினா். இதன்மூலம், ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினா். இதற்கு ஆட்சேபங்கள் தெரிவித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயா்நீதிமன்ற உத்தரவில் மதுரை மாவட்ட நிா்வாகம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவும், இதற்காக 16 போ் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நிகழாண்டு வருகிற 15-ஆம் தேதியன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவனியாபுரம் அனைத்து சமுதாயப் பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது குழுவுக்கு அனுமதி வழங்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிா்வாகமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
நிகழாண்டு அவனியாபுரம் அனைத்து சமுதாயப் பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொதுமக்கள் குழுவுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
ஜல்லிக்கட்டு போட்டி ஐபிஎல் விளையாட்டு கிடையாது. பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு, இந்தப் போட்டியை நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதை சில தனிநபா்கள் நடத்தியதின் காரணமாக பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு நடத்துவதுதான் சரியானது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் உலகப் புகழ் பெற்றவை. இந்தச் சூழலில், தனி நபா்கள் நடத்துவது பொருத்தமாக இருக்காது.
எனவே, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு நிா்வாகமே நடத்த வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

