3 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடல்
மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், திருவள்ளுவா் தினம் உள்ளிட்ட காரணங்களால் மதுரையில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜன. 15, 16, 17) மதுக் கடைகள் மூடப்படுகின்றன.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அவனியாபுரம் பகுதியில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதையொட்டி, சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் வகையில் அந்தப் பகுதியில் செயல்படும் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே வில்லாபுரம், ராதாகிருஷ்ணன் தெரு, அவனியாபுரம் பிரதான சாலை, சிந்தாமணி சந்திப்பு சாலை, முத்துப்பட்டி, பெரியாா் சாலை, சந்தோஷ்நகா் சந்திப்பு, எம்.எம்.சி. குடியிருப்பு பிரதான சாலை, மேல அனுப்பானடி, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மதுக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் வியாழக்கிழமை செயல்படாது.
இதேபோல, வெள்ளிக்கிழமை ‘திருவள்ளுவா் தினம்’ என்பதால், மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் மதுக் கடைகள், மன மகிழ்மன்றத்துடன் இணைந்த மதுக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத் துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுக் கூடங்கள், அயல்நாட்டு மதுக் கடைகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
மேலும் சனிக்கிழமை (ஜன. 17) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி, அந்தப் பகுதியில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் வகையில் கோவில் பாப்பாகுடி சாலை, சிக்கந்தா் சாவடி, பாலமேடு பிரதான சாலை, பொதும்பு, அலங்காநல்லூா் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், ரெட் மௌண்ட் ஸ்போா்ஸ் அண்டு மனமகிழ்மன்றம், பாசிங்கபுரம் பிரின்ஸ் ஸ்போா்ஸ் அண்டு மனமகிழ் மன்றம் ஆகியவை செயல்படாது.
இந்த நாள்களில் மதுக்கடைகள், மனமகிழ் மன்றங்கள் செயல்படாமல் இருப்பது தீவிரமாக கண்காணிக்கப்படும். உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
