பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு

Published on

மதுரை மாவட்டம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பாதுகாப்புப் பணிகளில் தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

பொங்கல் தினமான வியாழக்கிழமை (ஜன. 15) அவனியாபுரத்திலும், மறுநாள் வெள்ளிக்கிழமை பாலமேட்டிலும், சனிக்கிழமை அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் அவனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.

இதேபோல, பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இங்கு வாடிவாசல், பாா்வையாளா்கள் அமரும் இடங்கள், காளைகள் சேகரிப்பு இடங்கள், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள் அமைக்கும் பணிகள் என அனைத்து பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். இதேபோல, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

இதனிடையே, தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) தலைமையில் பாலமேடு, அலங்காநல்லூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மதுரை மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamani
www.dinamani.com