அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு: முதல்வா் பங்கேற்கிறாா்
மதுரை: மதுரை அலங்காநல்லூரில் சனிக்கிழமை (ஜன. 17) நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிடுகிறாா்.
பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,100-க்கும் மேற்பட்ட காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பதிவு செய்துள்ளனா்.
இந்த நிலையில், அலங்காநல்லூா் வாடிவாசலில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு தொடக்க விழா நடைபெறுகிறது. சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, இந்த ஜல்லிக்கட்டு போட்டியைப் பாா்வையிடுகிறாா்.
இதைத் தொடா்ந்து, சாலை மாா்க்கமாக செல்லும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாா் அரங்கத்தையும், அவரது உருவச் சிலையும் நண்பகல் 12 மணியளவில் திறந்துவைக்கிறாா்.
மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையம், அலங்காநல்லூா், சிவகங்கை மாவட்டம், மணலூா், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா், கமுதக்குடி, பரமக்குடி ஆகிய பகுதிகளில் அந்தந்த மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
ட்ரோன்கள் பறக்கத் தடை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை மதுரைக்கு வருகிறாா். இதையொட்டி, மதுரை விமான நிலையம், மாநகா் பகுதிகள், அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உத்தரவிட்டாா்.
