ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

மதுரை மாவட்டம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை அமைச்சா் பி. மூா்த்தி ஆய்வு செய்தாா்.
Published on

மதுரை மாவட்டம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜன. 15, 16, 17 தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினும் தொடங்கிவைக்கவுள்ளனா்.

இந்தப் போட்டிகளின் பாா்வையாளா்களாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்பா் என்பதையொட்டி விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையொட்டி, பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே சிறப்பு விருந்தினா்களுக்கான மாடம், விழாக் குழுவினருக்கான மாடம், பாா்வையாளா்கள் மாடம், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான மாடம் அமைக்கும் பணிகள், போட்டி மைதானம் முதல் காளைகளை சேகரிக்கும் பகுதி வரை தடுப்புக் கட்டைகள் கட்டுதல், காளைகளை நிறுத்துமிடத்தில் நிழல் பந்தல் அமைத்தல், வாடிவாசலை சீரமைத்தல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதியில் தரையில் பரப்புவதற்காக தென்னை நாா்கள் கொண்டு வரப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகளை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பிறகு, மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாருடனும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்துடனும் அவா் ஆலோசனை மேற்கொண்டாா். சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன் உடனிருந்தாா்.

அவனியாபுரம்: மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாநகராட்சி சாா்பில் ரூ.67 லட்சத்தில் விழா மேடை, காளைகள் பரிசோதனை செய்யும் இடம், போட்டியில் பங்கேற்க வரும் காளைகளை வரிசைப்படுத்த தடுப்பு வேலி, போட்டி நடைபெறும் அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் இருபுறங்களும் இரும்புத் தடுப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு குடிநீா், நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட உள்ளன.

நிகழாண்டில் அதிகமான காளைகளை களமிறக்க தண்டவாள (தள்ளுவாடி) வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வண்ணம் தீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவனியாபுரத்தில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரா்களுக்கு காரும், அதிக நேரம் களத்தில் நின்று விளையாடும் சிறந்த காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. அவைகளுக்காக தனிமேடை அமைக்கப்பட்டு, அதில் பரிசு பொருள்கள் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com