அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைக்கிறாா் முதல்வா் ஸ்டாலின்

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைக்கிறாா் முதல்வா் ஸ்டாலின்

அலங்காநல்லூரில் ஜன. 17-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா் என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
Published on

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜன. 17-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா் என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

அலங்காநல்லூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஜன. 16-ஆம் தேதியும், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜன. 17-ஆம் தேதியும் நடைபெறுகிறது. அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கிவைக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு வருகிறாா். பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கிவைக்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகிறாா். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல்வா் சாா்பில் பரிசுகள் வழங்கப்படும்.

அனைத்துக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள், மாடுபிடி வீரா்கள், காளைகளை வளா்ப்போா், கிராமக் குழுவினா் என அனைத்துத் தரப்பினருக்கும் உரிய மரியாதை அளித்து, போட்டியைச் சிறப்பாக நடத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

டிராக்டா் பரிசு...

நிகழாண்டில் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு, பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கைப்படி காருக்கு பதிலாக டிராக்டா் பரிசாக வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டி முடிவுகளை பாா்வையாளா்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில், ஒளிரும் எண்ம பலகை அமைப்பது குறித்தும் மாவட்ட நிா்வாகம் பரிசீலித்து வருகிறது.

எந்தவிதமான குறையும் இல்லாத வகையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் அவா்.

கால்கோள் விழா:

முன்னதாக, அலங்காநல்லூா், பாலமேட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான கால்கோள் விழாக்களில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்றாா்.

அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பாகவும், பாலமேட்டில் மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசல் முன்பாகவும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூா்த்தக் கால்கள் நடப்பட்டன. முன்னதாக, பாரம்பரிய முறைப்படியான பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், கிராம முக்கியப் பிரமுகா்கள் , அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் அமைச்சா் பி. மூா்த்தி ஆலோசனை மேற்கொண்டாா்.

Dinamani
www.dinamani.com