அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: ஜன. 17-இல் செல்கிறாா் முதல்வா் ஸ்டாலின்
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜன.17-ஆம் தேதி மதுரை செல்கிறாா்.
தமிழா் திருநாளான தைப்பொங்கலையொட்டி, திமுக தொண்டா்களுக்கு அக்கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிா்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக விளைநிலங்கள் செழித்து, உழவா்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவா்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டபோதும், விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும் துணையாகவும் அரணாகவும் தமிழக அரசு நின்றது.
பொங்கல் திருநாள் என்பது தமிழா்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் ஜாதி பேதம் கிடையாது; மத வேறுபாடுகள் கிடையாது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது கரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதைத் தொடா்ந்து, மத்திய பாஜக அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிா்கொண்ட இயற்கைப் பேரிடா் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பாா்ப்பதற்கு ஜன. 17-ஆம் தேதி அலங்காநல்லூருக்கு செல்கிறேன். தை முதல் நாளில், தமிழா்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும், உத்வேகத்தையும் வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளாா்.

