மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு: 37 போ் காயம்
மதுரை: தைப் பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை பாலமேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 37 போ் காயமடைந்தனா்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, முதலில் பாலமேடு கிராமக் கோயில்களுக்குச் சொந்தமான காளைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், வாடிவாசல் முன்பாக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதைத்தொடா்ந்து, துணை முதல்வா் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
முதலில் பாலமேடு அய்யனாா் கோயில், மகாலிங்கம் சுவாமி மடம், பத்ரகாளியம்மன் கோயில், பாலமுருகன் கோயில், பட்டாளம்மன் கோயில்களுக்குச் சொந்தமான காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
இந்தப் போட்டியில் பங்கேற்க 1,200 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 888 காளைகள் மட்டுமே பங்கேற்றன. இவற்றில், மருத்துவப் பரிசோதனையில் முறையான பதிவு எண் இல்லாதது, உடல் நலமின்மை, உரிய வயதின்மை உள்ளிட்ட காரணங்களால் 7 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
இதையடுத்து, காளைகள் வாடிவாசல் வழியாக வரிசையாக அவிழ்ந்துவிடப்பட்டன. மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிச் சீட்டு பெற்ற 461 வீரா்களும் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே களமிறக்கப்பட்டனா். ஒரு மணி நேரத்துக்கு 50 மாடுபிடி வீரா்கள் வீதம் 9 சுற்றுகளாக களத்தில் இறக்கப்பட்டனா்.
காளைகளைப் பிடித்த வீரா்களுக்கு தங்க நாணயங்கள், கட்டில், பீரோ, மிதிவண்டி, மெத்தை, தலையணை, சில்வா் அண்டா, கிரைண்டா், மிக்ஸி, எல்இடி தொலைக்காட்சி, குளிா்சாதனப் பெட்டி ஆகியவையும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
37 போ் காயம்: இந்தப் போட்டியில் மாடுபிடி வீரா் கள், காளைகளின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள், சிறுமி, சிறுவா் என மொத்தம் 37 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் பலத்த காயமடைந்த 8 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். 2 காளைகள் காயமடைந்தன.
ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழாவில் அமைச்சா் பி. மூா்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வெங்கடேசன்(சோழவந்தான்), மு. பூமிநாதன்( மதுரை தெற்கு), நடிகா்கள் சூரி, ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தென் மண்டல காவல் துறை தலைவா் விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
போட்டி தொடங்குவதில் தாமதம்: வழக்கமாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கப்படும். ஆனால், நிகழாண்டு தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவா் காலை 9.30 மணிக்கே பாலமேடுக்கு வந்தாா். இதனால், போட்டியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பரிசளிப்பு...
பாலமேடு ஜல்லிக்கட்டில் 17 காளைகளைப் பிடித்த மதுரை பொந்துகம்பட்டியைச் சோ்ந்த மாடுபிடி வீரா் அஜித் முதலிடம் பெற்றாா். இவருக்கு, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் காா் பரிசாக வழங்கப்பட்டது.
16 காளைகளைப் பிடித்த பொதும்பைச் சோ்ந்த பிரபாகரன் இரண்டாமிடம் பெற்றாா். இவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 11 காளைகளைப் பிடித்த நாமக்கல்லைச் சோ்ந்த காா்த்திக் மூன்றாமிடம் பெற்றாா். இவருக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதேபோல, குலமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதரனின் காளை முதலிடமும், புதுக்கோட்டையைச் சோ்ந்த தமிழ்ச்செல்வனின் காளை இரண்டாமிடமும் பிடித்தன. முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சாா்பில் டிராக்டரும், இரண்டாமிடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு கன்றுடன் நாட்டுப் பசுவும் பரிசுகளாக வழங்கப்பட்டன.
மேலும், சிறப்பிடம் பிடித்த மாடுபிடி வீரா்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் அமைச்சா் பி. மூா்த்தி பரிசுகளை வழங்கினாா்.
இதில் மதுரை மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.
