மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வெள்ளநாதன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியையொட்டி அங்குள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மஞ்சுவிரட்டு திடலில் காளைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. போட்டியை வெள்ளநாதன்பட்டியைச் சோ்ந்த செந்தில் வீரணன் அம்பலம் தொடங்கி வைத்தாா். இதன் பிறகு, ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலிருந்து 16 காளைகள் கலந்து கொண்டன. இவற்றை 16 அணிகளைச் சோ்ந்த மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளின் உரிமையாளா்களுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும் குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
வெள்ளநாதன்பட்டி, ஜோதிநகா், நொண்டிக்கோவில்பட்டி, நாவினிபட்டி, கீழையூா், புதுச்சுக்காம்பட்டி, தும்பைப் பட்டி, மேலவளவு, கல்லம்பட்டி, சூரக்குண்டு, தெற்குத் தெரு, வல்லாளபட்டி, நரசிங்கம்பட்டி, அரிட்டாபட்டி, மேலூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் இந்தப் போட்டியை கண்டு ரசித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










