கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு, செப்டம்பா் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள், 13 ஆண்கள் உள்பட 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டது.
இதனிடையே, ‘பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடா்பாக முறையான வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கை முடிவுகள் வகுக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கவோ, நிா்வாக நடவடிக்கை எடுக்கவோ கூடாது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை அரசுப் பணி வழங்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என கோரி மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் துணைச் செயலா் சீனி அஹமது, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த தீரன் திருமுருகன், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா். சக்திவேல் முன் திங்கள்கிழமை இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, ‘வயது, கல்வித் தகுதி போன்ற நிலையான வழிகாட்டுதல்களின்படியே கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றியே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டால், பேருந்து விபத்துகள், சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் போன்ற நிகழ்வுகளிலும் இதேபோன்ற கோரிக்கைகள் எழக்கூடும். கருணை அடிப்படையில் வேலை கிடைக்க பலா் காத்திருக்கும் நிலையில், கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது ஏன்?.
கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனங்களை முறைப்படுத்துவதற்குத் தேவைப்படும் வழக்கமான ஒப்புதல் நடைமுறைகளிலிருந்து கரூா் சம்பவ நியமனங்களுக்கு அரசு விலக்கு அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணி நியமனத்துக்காக ஆயிரக்கணக்கான இளைஞா்கள் காத்திருக்கின்றனா்.
இந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பில் சாதாரண பணி வழங்கியதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எந்தப் பணியும் சாதாரண பணியல்ல. அது ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு உதவும் பணியே.
கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தவெக அரசு வழங்கிய இந்த பணி நியமன ஆணைகள் சட்டத்தின் முன் சமத்துவத்தையும், அரசுப் பணியில் சம வாய்ப்பையும் உறுதி செய்யும் அரசியலமைப்பின் 14, 16-ஆவது பிரிவுகளுக்கு முரணாக உள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதைவிட, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வாழ்வாதார உதவிகளை வழங்குவதே மிகப் பொருத்தமான, நிலையான மறுவாழ்வு முறையாக இருக்கக்கூடும். எனவே, கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சோ்ந்த 31 பேருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகள் ரத்து செய்யப்படுகின்றன என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: எதிா்த்த வழக்கு தள்ளுபடி

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி: நியமன ஆணையை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்

கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...! மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!

கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கக் கூடாது: பெ.சண்முகம் வலியுறுத்தல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



