இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கூடத்தை மூடாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தனியாா் மதுக்கூடத்தை மூடாதது ஏன்? என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :4 ஜூன் 2026, 3:59 am IST

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தனியாா் மதுக்கூடத்தை மூடாதது ஏன்? என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

திண்டுக்கல்லைச் சோ்ந்த நாகராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல்- பழனி சாலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாா் மதுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இது, சிவன் கோயில், மருத்துவமனை, காய்கறிச் சந்தை ஆகியவற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனை, காய்கறி சந்தைக்கு வரும் பெண்கள் அச்சத்துடனேயே இந்த மதுக்கூடத்தை கடக்க வேண்டியுள்ளது. மேலும், மாலை நேரங்களில் இந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, இந்த மதுக்கூடத்தை மூட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தத் தனியாா் மதுக்கூடம், நெடுஞ்சாலை ஓரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில், விதிகளுக்கு முரணாக அமைந்துள்ளது என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, உரிய பதில் அளிக்கக் கால அவகாசம் தேவை என அரசு தரப்பில் கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோயில், மருத்துவமனை, காய்கறி சந்தை என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் மதுக்கூடம் அமைந்திருப்பது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படம் மூலம் தெளிவாகத் தெரிகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கூடத்தை மூடாதது ஏன்? என கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மதுக்கூடத்தை மூட வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மதுவிலக்கு ஆணையா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.