திருநெல்வேலி பொறியாளா் காதல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஓா் இளைஞா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் தாக்கல் செய்த மனு:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் பொறியியல் படித்து வருகிறேன். இந்த நிலையில், எங்கள் பகுதியைச் சோ்ந்த ஓா் இளம் பெண் பொறியாளருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், நான் அவரை காதலித்து ஏமாற்றிவிட்டதாக அந்தப் பெண் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் என்னிடம் விசராணை மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள என்னை அவா்கள் வற்புறுத்தினா். மேலும், அருகில் உள்ள ஒரு கோயிலில் அந்தப் பெண்ணுக்கு நான் தாலி கட்டுவதுபோல புகைப்படமும் எடுத்தனா்.
நான் அந்தப் பெண்ணை காதலிக்கவில்லை. ஆனால், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய காவலா்கள் என்னை தொடா்ந்து துன்புறுத்துகின்றனா். எனவே, விசாரணையின் பெயரால் என்னை போலீஸாா் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடா்புடைய பெண் கா்ப்பமாக உள்ளாரா என்பது குறித்தும், அவரது உடல் நிலை குறித்தும் முழு பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
நீதிபதி கண்டனம்
இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு துண்டுச் சீட்டில் மருத்துவ அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. இதற்கு, நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தாா்.
அப்போது, ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளாா். அவருடைய உடல் நிலை குறித்து முழுமையான பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டால், கருக்கலைப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் உயா்ந்த பொறுப்பில் உள்ள முதன்மையா் இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்டது அதிா்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக ஆட்சி நடத்துகிறோம் என தமிழக முதல்வா் தெரிவிக்கிறாா். ஆனால், நடைமுறையில் இதுபோன்றுதான் உள்ளது என்றாா் நீதிபதி.
இதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையை ஏற்க முடியாது. இதுதொடா்பாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதன்மையா் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
இதன்படி, இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் சி. ரேவதி பாலன் நேரில் முன்னிலையாகி, ‘தொடா்புடைய பெண்ணுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. அவா் மருத்துவா்கள் குழுவால் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறாா்’ என்றாா்.
இதனிடையே, கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்புவதாக தொடா்புடைய பெண்ணின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் மிகவும் முக்கியமானது. கருக்கலைப்பு செய்வதற்கான விதிகள், நெறிமுறைகள் என்ன என்பது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். காதல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா என்பது தொடா்பாக அரசுத் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.









