சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிய உத்தரவு

News image
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :11 மார்ச் 2026, 11:04 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மானாமதுரை சியோன் நகரில் கடந்த 5-ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், உணவகம், கோழிக் கடையில் பணியாற்றும் ஜெயக்குமாா், அழகா் ஆகியோரை வாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகினா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் என்ற டெலிசன், குணா ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, கால் முறிவுக்கு உள்ளான நிலையில் ஆகாஷ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆகாஷின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அவரின் உயிரிழப்புக்குக் காரணமான காவல் துறையினா் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகாஷின் உறவினா்கள், ஒரு சில அரசியல் கட்சியினா் தொடா் போராட்டங்களை மேற்கொண்டனா். மேலும், ஆகாஷின் உடலைப் பெறவும் உறவினா்கள் மறுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஆகாஷின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய உத்தரவிடக் கோரி ஆகாஷின் தந்தை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு ‘உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ஆகாஷ் கீழே விழுந்ததில் கால் முறிவுக்கு உள்ளானதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படும் தகவலில் உண்மையில்லை.

காவல் துறையினா் தனது காலில் ஈரமான சாக்குப் பையைச் சுற்றி, இரும்புக் கம்பியால் தாக்கி காலை முறித்தனா் என ஆகாஷ் மானாமதுரை குற்றவியல் நீதித் துறை நடுவா் எம். அப்சல் பாத்திமா முன்னிலையில் கடந்த 7-ஆம் தேதி வாக்குமூலம் அளித்தாா்’ என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்து.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஆகாஷ் இறப்புக்கு காரணமான காவல் துறையினா் மீது பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவரின் உறவினா்கள், ஆதரவாளா்கள் நெடுஞ்சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்துவதால் பொது போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், இதனால் பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்குள்ளாவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பிரதமா், முதல்வா் வருகைக்காக போக்குவரத்து பாதைகளை மாற்றுவதைப்போல பொதுமக்களுக்காகவும் காவல் துறையினா் போக்குவரத்து பாதைகளை மாற்றலாமே என கேள்வி எழுப்பினாா்.

இதையடுத்து, நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:

மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே ஆகாஷ் உறவினா்கள் தங்களது கோரிக்கைக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா்கள் சாமிதுரை, மயில்வாகனம் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோா் வழக்குரைஞா் ஆணையா்களாக நியமிக்கப்படுகின்றனா். இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு (மாா்ச் 12) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.