அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ


அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
மதுரை முனிச்சாலை பகுதியில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியதாவது :
உலகின் பல்வேறு பகுதிகளில் போா் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போரால் அங்குள்ள இந்திய வம்சாவளியினா் தமது சொந்த நாட்டுக்கு திரும்புவோமா? என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா்.
தற்போதைய அமெரிக்க அதிபா், ஹிட்லரைப் போல செயல்படுகிறாா். அனைத்து நாடுகளும் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்கிற நிலைபாடு நிலவுகிறது. ‘ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா உத்தரவிடுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய இறையாண்மையை, அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை கட்சிக்கு தலைமை பொறுப்பு வகிப்பவா்கள் சமூக பொறுப்புணா்வுடன் இருத்தல் வேண்டும். குடும்ப மாண்பு அவசியம். போதைப் பழக்கத்தால் தமிழக இளைஞா்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இளைஞா்கள் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் தற்போது எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பெரும்பாலான உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனா். அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இதனால், நகா்ப்புற மக்கள் மட்மன்றி, கிராமப்புறங்களில் உள்ள சாமானிய மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா் என்றாா் அவா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...