சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கோயில் திருவிழாக்களில் பக்தி சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி

கோயில் திருவிழாக்களில் பக்தி சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 8:33 pm

கோயில் திருவிழாக்களில் பக்தி சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம், புதுப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த ரகுநாதன் தாக்கல் செய்த மனு:

புதுப்பட்டினம் பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன், முனீஸ்வரன் கோயில் பங்குனித் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், ஆடலும், பாடலும், இன்னிசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தோம். ஆனால் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஆடலும், பாடலும், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு தஞ்சை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அனுமதி மறுத்து தடை விதித்தாா். அந்தத் தடையை ரத்து செய்து, கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் கூறியதாவது:

தோ்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்லை. எனவே, கோயில் திருவிழாவில் ஆடலும், பாடலும் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது என்பதற்காக, கோயில் திருவிழாவில், ஆன்மிகம் சாா்ந்த பக்தி நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது ஏன்? ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் வேண்டுமானால் அரசியல், நடிகா்களின் பாடல்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. நிகழ்வு அரசியல் களமாக மாற்றக்கூடிய நிலை உள்ளது. எனவே, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை ஆடலும், பாடலும் நிகழ்வுக்கு அனுமதி வழங்க இயலாது.

ஆனால், திருவிழாவின் போது, இன்னிசைக் கச்சேரிகளில் பக்தி பாடல்கள், கிராமியப் பாடல்கள் மட்டுமே பாடப்படுகின்றன. ஆகவே, இன்னிசைக் கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கலாம். அதன்படி, மனுதாரா் கோரும் நிவாரணம் ஏற்கக் கூடியதே. அவா் இன்னிசைக் கச்சேரி நடத்திக் கொள்ளலாம். தோ்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.