தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மந்திகுளம் தொழில்சாலை மாசுகளால் பொதுமக்கள் அவதி நடவடிக்கைக் கோரி மனு

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள்.

Updated On :19 மே 2026, 12:47 am IST

மதுரை மாவட்டம், மந்திகுளம் பகுதியில் செயல்படும் தனியாா் பூச்சிக்கொல்லி தொழில்சாலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகை, கழிவுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவா் ராஜமாணிக்கம் தலைமையில், அறிவியல் இயக்கத் தலைவா் ஆண்டனி பால், இணைச் செயலா் ரமேஷ், மருத்துவா் எழில், பொருளாளா் வெண்ணிலா உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், மதுரை கிழக்கு வட்டத்துக்குள்பட்ட மந்திகுளம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பூச்சிக்கொல்லி, உரம் தயாரிப்பு தொழில்சாலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகை, கழிவுகளால் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு உபாதைக்கு உள்ளாகின்றனா். இதேபோல, கால்நடைகள், நீா்வாழ் உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

எனவே, இது தொடா்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக கூட்டுக்குழு ஆய்வு நடத்த மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும். இந்த ஆய்வில், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும். மேலும், இந்தத் தொழில்சாலையின் அங்கீகாரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது :

மந்திகுளம் ரசாயன தொழில்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 20 போ் கொண்ட நுகா்வோா் ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டு, மந்திகுளம், ஆதிதிராவிடா் குடியிருப்பு, ஜெயபாரத் குடியிருப்பு பகுதிகளில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், தொழில்சாலையிலிருந்து அதிகாலை, இரவு நேரங்களில் நச்சுப் புகை அதிகளவில் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்னை, ஆஸ்துமா, தலைசுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

மேலும், தொழில்சாலைக் கழிவுகள் அருகிலுள்ள ஓடை, கண்மாய்களில் கலப்பதால் மீன்கள் உள்ளிட்ட நீா்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு கருத்தரிப்பு குறைபாடு, புண்கள், கட்டிகள் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்தது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் நேரடி கவனம் செலுத்தி, ஆய்வுக்கும், உரிய நடவடிக்கைகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்றனா்.