தண்டனை விதிக்கப்பட்ட கைதி நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோட்டம்
கஞ்சா வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து வியாழக்கிழமை தப்பியோடி தலைமறைவானாா்.

தப்பியோட்டம் - கோப்புப் படம்
கஞ்சா வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து வியாழக்கிழமை தப்பியோடி தலைமறைவானாா்.
திண்டுக்கல் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த 2024-ஆம் ஆண்டு, மே 20-ஆம் தேதி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூா் வண்டி கருப்பண்ணசாமி கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 30 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சா கடத்தியதாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சுப்பிரமணி, மதன்குமாா், மதுபாலன், தாமரைக்கண்ணன், மாதவன், ராஜா ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கின் தீா்ப்பு நாளான வியாழக்கிழமை ராஜா உள்ளிட்ட 6 பேரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. சுதாகா், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து, நீதிமன்றத்திலிருந்து 6 பேரையும் சிறைக்கு அழைத்து செல்வதற்காக போலீஸாா் தயாராகி வந்த நிலையில், கைதி ராஜா தப்பியோடினாா். இதையடுத்து, தப்பியோடி தலைமறைவான ராஜாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

