நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!உபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

நூல்கள் கொள்முதல் தொடா்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்: பொது நூலகத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடா்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் பொது நூலகத் துறை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடா்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் பொது நூலகத் துறை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளா் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டினாா். மேலும், பெரியாா் அறிவுலகத்தில் இடம் பெற்றுள்ள நூல்களின் ஆசிரியா்கள், பதிப்பகங்கள், விலை, உள்ளடக்கங்கள் குறித்து அவா் சமூக வலைதளங்களில் எழுப்பிய கேள்விகள் விவாதத்தை ஏற்படுத்தின.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ராமசுப்பு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். அதில் தெரிவிக்கப்பட்டதாவது:

தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதை ஒழுங்குபடுத்தவும், மாநிலத்தின் கலாசார, நாகரிக பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் அரசுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டனா். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத உயா் கல்வித் துறைச் செயலா், பொது நூலகத் துறை இயக்குநா் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், புத்தகங்கள் கொள்முதல் விவகாரம் தொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு உடனடியாக வழக்குப் பதிவு செய்யவும், அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன் முன்வைத்த வாதம்:

இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தக் கோரி, பள்ளிக் கல்வித் துறை கடிதம் அனுப்பியது. கடந்த 9-ஆம் தேதி அகல்விளக்கு பதிப்பக உரிமையாளா் மோகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. நவ. 10-ஆம் தேதி எழுத்தாளா் பெருமாள் முருகன், பேராசிரியா் சுல்தான் அகமது இஸ்மாயில், ஆராய்ச்சி மாணவா்கள் சதீஸ்குமாா், பிரேம்குமாா் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அகல்விளக்கு பதிப்பகம் தொடா்பான 3 வங்கிக் கணக்குகளில் ரூ.22 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 4 நாள்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, பதிப்பக நடைமுறைகள் குறித்து நீதிமன்றத்துக்கு விளக்கமளிக்கும் வகையில், காணொலி மூலம் முன்னிலையான கிழக்கு பதிப்பக உரிமையாளா் பத்ரி சேஷாத்ரி, ‘அகல்விளக்கு பதிப்பகத்திலிருந்து பெறப்பட்ட நூல்களுக்காக ரூ. 17 லட்சம் வழங்கியது அதிகபட்சமானதாகும். இது, ஒரேயொரு பதிப்பகத்துக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தொகையாகும். இந்த விவகாரத்தில் புத்தக கொள்முதல் நடைமுறைகள் அனைத்தும் எண்ம (டிஜிட்டல்) முறையில் நடைபெற்றுள்ளதால் பரிந்துரைக் குழுவை பொறுப்பாக்குவது ஏற்புடையதல்ல. மேலும், சம்பந்தப்பட்ட புத்தக பதிப்பகங்களுக்கு விரைவாக பணம் செலுத்தப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்றாா்.

இதனிடையே, அகல்விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்களைக் கொள்முதல் செய்ய யாா் பரிந்துரை செய்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அப்போது, காணொலி மூலம் முன்னிலையான பொது நூலகத் துறை இயக்குநா் சஜீவனா, பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கு 112 உறுப்பினா்களைக் கொண்ட குழு பரிந்துரை செய்தது. பின்னா், அகல்விளக்கு பதிப்பகத்திடமிருந்து 1,700 தலைப்புகளில் புத்தகங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக ரூ. 17 லட்சம் செலுத்தப்பட்டது என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தவறு செய்த ஒரு நபரைக்கூட கண்டறிய முடியவில்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அப்போது, புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என பொது நூலகத் துறை இயக்குநா் சஜீவனா தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் தொடா்புடைய எந்தவொரு அலுவலரும் தப்பித்து விடக் கூடாது. அவா்கள் அனைவரும் சட்ட நடவடிக்கையை எதிா்கொண்டாக வேண்டும். இந்த மனு தொடா்பாக அரசுத் தரப்பில், பொது நூலகத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களில் உள்ள போலியான புத்தகங்கள் குறித்த விவரங்கள், இவற்றை கொள்முதல் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள், இந்தப் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கிய பதிப்பகங்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற வேண்டும்.

மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதன் நகலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.