மதுரை: காவல் நிலையத்தில் தற்கொலை செய்த ஓட்டுநர் உடலைப் பெற குடும்பத்தினர் ஒப்புதல்!
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்த ஓட்டுநர் உடலை பெற குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்துள்ளதைப் பற்றி...

ஓட்டுநர் பாலகிருஷ்ணன்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலை பெற குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், தேவாரத்தைச் சேர்ந்த ரங்கப்பன் மகன் பாலகிருஷ்ணன் (42). லாரி ஓட்டுநரான இவர் கடந்த நவ. 3-ஆம் தேதி தேவாரத்திலிருந்து சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான 60 ஏலக்காய் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் கண்மாய்க் கரை அருகே வந்த போது, வாரியிலிருந்து திடீரென புகை வெளிவந்தது. இதையடுத்து, பாலகிருஷ்ணன் லாரியிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். எனினும், லாரி முழுவதும் தீப்பிடித்ததில் ஏலக்காய் மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து வாலாந்தூர் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை செய்ய வாலாந்தூர் காவல் நிலைய ஆய்வாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து, லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனை வெள்ளிக்கிழமை இரவு செக்கானூரணி காவல் நிலையத்துக்கு வரவழைத்தார். இதையடுத்து, அவரிடம் லாரியில் தீப்பிடித்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து பாலக்கிருஷ்ணன் சனிக்கிழமை அதிகாலை காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் கதவை உடைத்துப்பார்த்த போது, பாலகிருஷ்ணன் தனது சட்டையால் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாலகிருஷ்ணனின் உறவினர்கள், பொதுமக்கள் செக்கானூரணி காவல் நிலையம் முன் திரண்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பாலக்கிருஷ்ணனின் மகன் உள்பட குடும்பத்தினர் 25 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடலை பெறாமல் 4 நாள்கள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், பாலக்கிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று (நவ. 18) காலை 9 மணி அளவில் அவரது உடல் சொந்த ஊரான தேனி தேவாரத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Summary
The family members of Balakrishnan, a driver who died by suicide at the Chekkanoorani police station in Madurai, have agreed to accept his body.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

