நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

சுங்கச்சாவடிகள் இடமாற்ற விவகாரம்: நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க உத்தரவு

கப்பலூா், நத்தம்பட்டி சுங்கச்சாவடிகளை இடமாற்றம் செய்யக் கோரிய மனு தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

கப்பலூா், நத்தம்பட்டி சுங்கச்சாவடிகளை இடமாற்றம் செய்யக் கோரிய மனு தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மூத்த வழக்குரைஞா் டி.எஸ்.ஆா். வேங்கடரமணா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி, நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைக்கக் கூடாது. ஆனால், கப்பலூா் சுங்கச்சாவடி மதுரை மாநகரின் தெற்கு எல்லையான திருநகரிலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் விதிகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 744-இல் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்கு வடக்கே 19 கி.மீ. தொலைவில் புதிதாக அமைக்கப்பட்ட நத்தம்பட்டி சுங்கச்சாவடி கப்பலூா் சுங்கச்சாவடியிலிருந்து 33 கி.மீ. தொலைவில் மட்டுமே அமைந்துள்ளது. இது இரு சுங்கச்சாவடிகளுக்கு இடையே இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு விதிகளுக்கு எதிரானது.

நத்தம்பட்டி முதல் கப்பலூா் இடையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. மூன்று உயா்நிலைப் பாலங்கள் கட்டி முடிக்கப்படாத நிலையிலும், நான்கு வழிச்சாலை, அணுகு சாலைகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையிலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலைப் பணிகள் முழுமையாக முடிந்து 45 நாள்களுக்குப் பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கு முடியும் வரை கப்பலூா், நத்தம்பட்டி சுங்கச்சாவடிகளில் சட்டவிரோதமாகச் சுங்கக் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். விதிகளை மீறி அமைக்கப்பட்ட கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்றி தேசிய நெடுஞ்சாலை 44-இல் கள்ளிக்குடி பகுதிக்கும், நத்தம்பட்டி சுங்கச்சாவடியை அகற்றி ராஜபாளையத்தை அடுத்துள்ள பகுதிக்கும் இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.