வேதாளை கிராமச் சாலையை சீரமைக்கக் கோரி மனு: 8 வாரங்களுக்குள் பணிகளை முடிக்க உத்தரவு
வேதாளை ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்லும் சாலையை 8 வாரங்களுக்குள் சீரமைத்து, அதுகுறித்த அறிக்கையை அந்த மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்லும் சாலையை 8 வாரங்களுக்குள் சீரமைத்து, அதுகுறித்த அறிக்கையை அந்த மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் முகமது மாலிக், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: ராமநாதபுரம் மாவட்டம், வலையா்வாடி தேசிய நெடுஞ்சாலை முதல் வேதாளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வரை உள்ள தாா்ச்சாலையின் இரு புறங்களிலும் அரிப்பு ஏற்பட்டு பெரும் பள்ளமாக உள்ளது.
இதனால், வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியைத்தான் பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனா். மிதிவண்டிகளில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
எனவே, தாா்ச்சாலையின் இரு புறங்களையும் விரிவுபடுத்தி தருமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, இந்த தாா்ச்சாலையை விரிவுபடுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் யாசா் அராபாத் முன்னிலையாகி சேதமடைந்த சாலையின் புகைப்படங்களை தாக்கல் செய்தாா். அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் சம்பந்தப்பட்ட சாலைப் பணிகளுக்கு அரசிடம் ஒப்புதல் கோரி விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பள்ளிக் குழந்தைகள் செல்லும் சாலையாக இருப்பதால், மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் விரைவாக ஒப்புதல் பெற்று, இந்தச் சாலையை 8 வாரங்களுக்குள் சீரமைக்க வேண்டும்.
இந்தப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றிய பிறகு அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

