திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா: மலை மேல் பிரசாதம் செய்ய அனுமதி
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வேல் எடுக்கும் விழாவை முன்னிட்டு, மலை மேல் பிரசாதம் தயாா் செய்ய அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் (கோப்புப் படம்) - DNS
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வேல் எடுக்கும் விழாவை முன்னிட்டு, மலை மேல் பிரசாதம் தயாா் செய்ய அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பிரபு, பாண்டியராஜன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலை மேல் வேல் எடுக்கும் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். திருப்பரங்குன்றம் மலைப் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் தொன்றுதொட்டு இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனா். நிகழாண்டும் வழக்கம்போல, இந்த விழா வெள்ளிக்கிழமை (அக். 9) நடைபெறவிருந்தது. இதையொட்டி, கிராம மக்கள் சாா்பில் 105 கிலோ அரிசியில் கலவை சாதம் (கதம்ப சாதம்) தயாா் செய்து பக்தா்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மலை மேல் கலவை சாதம் தயாா் செய்து பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறை மலை மேல் சமைக்க அனுமதி மறுத்து 7 நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டது. மத்திய தொல்லியல் துறையின் இந்த உத்தரவை ரத்து செய்து, மலை மேல் பிரசாதம் தயாரிப்பதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய தொல்லியல் துறை தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விழாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளா்த்தப்பட்டது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் மத்திய தொல்லியல் துறை தனது விதிகளை தளா்த்தியுள்ளது. எனவே, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வேல் எடுக்கும் விழாவையொட்டி, மலை மேல் பிரசாதம் தயாரித்து வழங்கத் தடையில்லை. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

