ஆயுத பூஜை: மதுரை கடை வீதிகளில் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வாழைக் கன்று, வாழை இலை வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
ஆயுத பூஜையை முன்னிட்டு, பொருள்கள் வாங்குவதற்காக திரளானோா் குழுமியதால், மதுரை மாநகரின் முக்கிய கடை வீதிகள் பொதுமக்கள் கூட்டத்தால் ஞாயிற்றுக்கிழமை களைகட்டின.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை திங்கள்கிழமையும், விஜயதசமி செவ்வாய்க்கிழமையன்றும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் வீடுகள், வியாபார நிறுவனங்கள், அலுவலகங்கள் வண்ண காகிதங்கள், மா இலை தோரணங்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.
மேலும், மாலை நேரத்தில் வாழைப்பழம், தேங்காய், பூ, பொரி, அவல், சுண்டல் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் நடத்தப்படும்.
இதையொட்டி, மதுரை கடை வீதிகளில் மலா்கள், மங்கலப் பொருள்கள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு பூ, பழம், பொரி, வாழைக்கன்று, மாவிலை தோரணம், பூசணிக் காய் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன.
இரு வாழைக் கன்றுகள் (ஒரு செட்) ரூ. 60 முதல் 80 வரையும், மாங்கொத்துகள் ரூ. 15 முதல் ரூ. 20 வரையும், பொரி, அவல், நிலக்கடலை, சா்க்கரை ஆகியன கலந்த பொரி இணைந்த பொட்டலம் (செட் பாக்கெட்) ரூ. 60-க்கும் விற்பனையாகின.
இதேபோல, மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி மலா்கள் விற்பனைச் சந்தையில் 2-ஆவது நாளாக பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. ஆயுத பூஜை, விஜயதசமி, பருவநிலை மாற்றம் காரணமாக வரத்துக் குறைவாக இருந்ததால் பூக்களின் விலை சற்று கூடுதலாக விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்ட தற்காலிகக் கடையில் பொறி வாங்கிய மக்கள்.

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி பூக்கள் விற்பனைச் சந்தையில் திரண்ட பொதுமக்கள், வியாபாரிகள்.

மதுரை கீழமாசி வீதி சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக அமைக்கப்பட்ட விற்பனைக் கடையில் பழங்கள் வாங்கிய பொதுமக்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

