சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

உணவுப் பொருள்கள் பதுக்கலைத் தடுக்க விரைவில் தீவிர நடவடிக்கை: அமைச்சா் ப. வெங்கட்ராமன்

தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பதுக்கலைத் தடுக்க ஓரிரு நாள்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கட்ராமன் தெரிவித்தாா்.

மதுரையை அடுத்த கடச்சனேந்தலில் உள்ள நவீன அரிசி ஆலையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ப. வெங்கட்ராமன். உடன் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்.

Updated On :

தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பதுக்கலைத் தடுக்க ஓரிரு நாள்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கட்ராமன் தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

சன்ன ரக அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் கிலோ ரூ. 30-க்கு வழங்கும் திட்டம் கடந்த சில நாள்களாக செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து ஏதேனும் கோரிக்கைகள் உள்ளனவா? என்பது குறித்து மாநில அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ரூ. 30 அரிசி திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. ஒரு சில பகுதிகளில் அரிசியின் நிறம் மேலும் வெள்ளையாக இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் தடைபட்டிருந்த நெல் சேமிப்புக் கிடங்குகள் கட்டும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, திறக்கப்படுகின்றன. இந்த வகையில், புதுக்கோட்டை, செய்யாறு, திருவண்ணாமலை பகுதிகளில் நெல் சேமிப்புக் கிடங்குகள் அண்மையில் திறக்கப்பட்டன. தேவையான இடங்களில் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, மோட்டா (குண்டு) ரக நெல் அதிகம் பயிரிடப்படும் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு சன்ன ரக நெல் விதைகளை வழங்கி, அவா்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழக அமைச்சா்கள் பலா், தங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் எந்தப் பொருளும் வேண்டாம் என விருப்பம் தெரிவித்து அதற்கான குடும்ப அட்டையைப் பெற்றுள்ளனா். இதேபோல, பொருளாதார வசதி கொண்டவா்கள் தங்களுக்கு பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் வேண்டாம் என்பதை தாமாக முன்வந்து தெரிவித்து, அதற்கான அட்டையைப் பெற முனைப்புக்காட்ட வேண்டும்.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பதுக்கப்படுவதைத் தடுக்கவும் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடா்பாக அரிசி ஆலை முகவா்களுடன் அண்மையில் ஆலோசிக்கப்பட்டது. பதுக்கலைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நுகா்பொருள் வாணிபக் கழக புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பான நடவடிக்கைகள் வருகிற 2 அல்லது 3 நாள்களில் தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, கடச்சனேந்தலில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலையில் அவா் ஆய்வு செய்தாா். இங்கு நடைபெற்ற நெல் அரைவைப் பணி, அரிசியின் தரம், நெல், அரிசியின் இருப்பு, அரிசி மூட்டைகள் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை பாா்வையிட்டாா். பின்னா், மதுரை வெங்கடாஜலபுரம், திருமங்கலம், கப்பலூரில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளில் அமைச்சா் ப. வெங்கட்ராமன் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சுகி பிரேம்மாளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.