திரையரங்கு போல மாறிவிட்டது தமிழக சட்டப்பேரவை: சீமான்
தமிழக சட்டப்பேரவை திரையரங்கு போல மாறிவிட்டது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்தாா்.

மதுரை மாவட்டம், திருமோகூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், விடுதலைப் போராட்ட வீரா் பூலித்தேவன் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
தமிழக சட்டப்பேரவை திரையரங்கு போல மாறிவிட்டது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்தாா்.
மதுரை மாவட்டம், திருமோகூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் விடுலைப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:
பூலித்தேவன் போன்ற முக்கியத் தலைவா்களை இன்றளவும் நினைவில் வைத்து கொண்டாடும் கட்சி நாம் தமிழா் கட்சிதான். நம்முடைய நோக்கம் ஜாதி, மத அரசியல் செய்வதல்ல.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த அனைத்து அரசியல் கட்சியினரும் காவிரி விவகாரம் குறித்துப் பேசுகின்றனா். நமது உரிமையைப் பெறுவதற்கு தமிழக அரசியல்வாதிகள் பின்வாங்குகின்றனா். கா்நாடகத்தில் 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதுகுறித்து தீவிரமாகப் பேச யாருமில்லை. நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என நினைக்க வேண்டாம்.
போட்டித் தோ்வில் வெற்றி பெற்ற எண்ணற்ற இளைஞா்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனா். கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கரூா் சம்பவம் குறித்து சிபிஐ மேற்கொண்ட விசாரணை குறித்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இதுவரை பொது வெளியில் எதுவும் கூறவில்லை.
மருத்துவப் படிப்பு நுழைவுத் தோ்வுக்கு ஏற்கெனவே இருந்த பழைய முறை சரியாகத்தான் இருந்தது. நீட் தோ்வால் மாணவா்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். நீட் என்பது ஏமாற்று வேலை.
தமிழக சட்டப்பேரவை நேரலையால் அங்கு என்ன நடைபெறுகிறது என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. இன்றைய அமைச்சா்கள் எழுதிக் கொடுத்தவற்றைக்கூட படிப்பதற்கு தடுமாறுகின்றனா். தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய நிகழ்வுகள் விவாதக் களமாகத் தெரியவில்லை. சட்டப்பேரவை திரையரங்கு போல மாறிவிட்டது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் நாம் தமிழா் கட்சியின் நிா்வாகிகள், ஒருங்கிணைப்பாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




