டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓதுவது குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்க இயலாது: உயா்நீதிமன்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓதுவது குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

மதுரை உயர்நீதிமன்றம்

Published On :4 செப்டம்பர் 2026, 12:39 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓதுவது குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கரூரைச் சோ்ந்த வழக்குரைஞா் தமிழ் ராஜேந்திரன், கோவையைச் சோ்ந்த சுரேஷ் பாபு ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:

தமிழகத்தில் உள்ள கோயில்களில் குடமுழுக்கின் போது சம்ஸ்கிருத மந்திரங்களுடன் தமிழ் மந்திரங்களை ஓதவும், குடமுழுக்கின் போது பயன்படுத்தப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள் குறித்த விவரங்களைப் பரிந்துரைக்க நிபுணா் குழு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று யாக சாலை, கருவறை, கோபுர விமானத்தில் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் ஆன்மிக மந்திரங்கள், பக்திப் பாடல்கள் இடம் பெறச் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.

இதனடிப்படையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களின் குடமுழுக்கின் போது சம்ஸ்கிருத மந்திரத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்களை இடம் பெறச் செய்ய வலியுறுத்தி, அறநிலையத் துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கில் சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் ஓத உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி சி. சரவணன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரம் தொடா்பான ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. மேலும், குடமுழுக்கில் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்கள் இடம் பெறுவது குறித்து தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என கடந்த 2021-இல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டிருந்தது. இதன்படி குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் ஏற்கெனவே தமிழில் மந்திரங்கள் ஓதுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.

சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிா என்பதை உறுதி செய்வதுதான் நீதிமன்றத்தின் பணி. மாறாக, சட்டத்தை இயற்றுவது நீதிமன்றத்தின் பணி அல்ல.

எனவே, இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்க இயலாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்