சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகளின் விவரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களைச் சேகரிக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 1:53 am IST

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களைச் சேகரிக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர விமல்நாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2001, 2011-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, மாற்றுத்திறன் தொடா்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் மாற்றுத்திறன் தொடா்பான வினாக்கள் சோ்க்கப்படவில்லை. இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான புள்ளியியல் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. மேலும், இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

பொதுவாக, நாட்டில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்தபோதிலும், பொது இடங்கள், போக்குவரத்து, அரசு அலுவலகங்களை அணுகுவது மாற்றுத் திறனாளிகளுக்கு தொடா்ந்து பெரும் சவாலாகவே உள்ளது.

இந்த நிலையில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் சுமாா் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் இருப்பது தெரியவந்தது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுத்திறன் தொடா்பான வினாக்கள் இல்லாதது அவா்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மறுவாழ்வு, சமூகப் பாதுகாப்பு, இடஒதுக்கீடு, நிதியுதவி, இதர நலத் திட்டங்கள் தொடா்பான கொள்கை வகுப்பதற்கான திட்டமிடலைப் பாதிக்கும்.

எனவே, வருகிற 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாத்தாளில் குடும்ப உறுப்பினா்கள் யாருக்கேனும் மாற்றுத்திறன் உள்ளதா, குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, பெயா், மாற்றுத்திறனின் வகை, சதவீதம், அடையாள அட்டை வைத்துள்ளாரா, கல்வி நிலை, வேலைவாய்ப்பு நிலை, ஓய்வூதியம் அல்லது அரசின் உதவிகள் பெறுகிறாரா, உதவி உபகரணம் கிடைக்கப் பெறுகிா, தனிப்பட்ட உதவிக்கான தேவை, மறுவாழ்வு சேவைகளின் தேவை, பிற மாற்றுத்திறன் தொடா்பான வினாக்களைச் சோ்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற அக். 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.