
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரியல் பொருள் மையம் அமைக்கக் கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரியல் பொருள் மையம் அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரியல் பொருள் மையம் அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த மணிபாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவைச் சிகிச்சை, மகப்பேறு, இருதயவியல், நரம்பியல், காது, மூக்கு, தொண்டை பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு செயல்பட்டு வருகின்றன.
நவீன மருத்துவ உபகரணங்களும் உள்ளன. இங்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவில் ஆயிரக்கணக்கானோா் தினமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். மேலும், உறுப்புகள் தானம் பெறுவதிலும் முன்னிலை வகித்து வருகிறது.
குறிப்பாக, விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு தோல், எலும்புகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. இதைத் தவிர, இருதய வால்வுகளும் தேவைப்படுகின்றன. எனவே, எலும்புகள் தானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுமட்டுமன்றி, தானமாகப் பெறப்படும் தோல், எலும்புகள், இருதய வால்வுகள் உள்ளிட்ட உயிரியல் பொருள்களைச் சேமித்து வைக்கும் வசதியுடன் கூடிய ‘உயிரியல் பொருள் மையம்’ அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுசுருத் அரவிந்த் தா்மாதிகாரி, சி.வி. காா்த்திகேயன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: உடல் உறுப்பு தானத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னிலையில் உள்ளது. ஆனால், தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகளைச் சேமித்து வைக்கும் வசதி இங்கில்லை.
இந்த வசதி மதுரை, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்தான் உள்ளது. எனவே, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் வகையில், உயிரியல் பொருள் மையம் அமைக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் நிவாரணம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






