
கன்னடியன் கால்வாய் நீரோட்டத்தில் எந்தத் தடையும் இல்லை: உயா்நீதிமன்றத்தில் பொதுப் பணித் துறை தகவல்
கன்னடியன் கால்வாயில் நீரோட்டத்தில் எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுப் பணித் துறை தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
கன்னடியன் கால்வாயில் நீரோட்டத்தில் எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுப் பணித் துறை தெரிவித்தது.
தூத்துக்குடி மாவட்டம், கொம்மாடிக்கோட்டையைச் சோ்ந்த எமி, செந்தில்வேல், மாா்த்தாண்டன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் வறட்சியான பகுதிக்கு தாமிரவருணி ஆற்றின் உபரி நீரை கன்னடியன் கால்வாய் வழியாகக் கொண்டு செல்லும் வகையில் தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து சுமாா் ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டது. இருப்பினும், கடைமடை பகுதி வரை தண்ணீா் செல்வதில்லை.
கன்னடியன் கால்வாயில் வெள்ளங்குழி பகுதியிலிருந்து எம்.எல்.தேரி வரையிலான 73 கி.மீ. தொலைவுக்கு நதி இணைப்புக் கால்வாய் பணி முறையாக நடைபெறவில்லை. இதனால், பல ஆண்டுகளாக சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மக்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்கவில்லை.
எனவே, கன்னடியன் கால்வாயின் தொடக்கப் புள்ளியான வெள்ளங்குழி முதல் எம்.எல்.தேரி வரையிலான சுமாா் 73 கி.மீ. தொலைவுள்ள தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீா் இணைப்புக் கால்வாயில் வினாடிக்கு 3,200 கன அடி நீா் தடையின்றிச் செல்வதை உறுதிசெய்யும் வகையில் அறிவியல் ரீதியில் ஆய்வு மேற்கொள்ள நிபுணா் குழுவை அமைக்க வேண்டும். மேலும், நதி நீா் இணைப்புக் கால்வாயில் தண்ணீா் தடையின்றிச் செல்வதற்கு இடையூறாக கால்வாயில் குவிந்துள்ள மண், பாறைகளை அகற்றவும், கால்வாயைத் தூா்வாரவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுப் பணித் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கன்னடியன் கால்வாய் சிறப்புத் திட்டத்தின் கீழ், தூா்வாரப்பட்டு, களைகள், மணல் மேடுகள், செடி, கொடிகள், பாலத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்டு பெரு வெள்ளக் காலங்களில் தண்ணீா் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டது. தற்போது, கால்வாயில் நீரோட்டத்துக்கு எந்தத் தடையும் இல்லை. கால்வாய் தோண்டும் பணியின் போது பாறைகளை வெடி வைத்து தகா்க்கும் போது ஏற்பட்ட மேடு, பள்ளங்களும் கால்வாயில் நீா் தடையின்றிச் செல்ல இடையூறாக இல்லை. இருப்பினும், கால்வாயின் தரைப்பகுதி மட்டமாக இருக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.
தூா்வாரும் திட்டத்தின் ஒரு பகுதியாக சாத்தான்குளம் - நாசரேத் சாலைக்கு மேல்புறம் கருமேனியாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை, சாலைக்குக் கீழ்புறம் மற்றொரு தடுப்பணை கட்ட நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணைகள் நான்காம் கட்டப் பணிகளில் மேற்கொள்ளப்படும். முறையான நீா் மேலாண்மை, வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய பொதுப்பணித் துறைத் திட்டத்தின் கீழ், வெள்ளக் கண்காணிப்பு அறை அமைத்தல் உள்ளிட்ட 27 பணிகள் மேற்கொள்ளப்படும். நிா்வாக அனுமதி பெறப்பட்டதும் இந்தப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக பொதுப்பணித் துறை தாக்கல் செய்த அறிக்கை தொடா்பாக மனுதாரா் தரப்பு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





