கொடைக்கானல் பிரகாசபுரத்தில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரி மனு: நகராட்சி நிா்வாகம் பதிலளிக்க உத்தரவு

கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கக் கோரிய மனு தொடா்பாக நகராட்சி நிா்வாகம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கக் கோரிய மனு தொடா்பாக நகராட்சி நிா்வாகம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த கரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேற்குத் தொடா்ச்சி மலையின் ஒரு பகுதியான பிரகாசபுரம், இதைச் சுற்றியுள்ள சோலைக்காடுகளில் டன் கணக்கில் திடக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், அந்தப் பகுதியின் பல்லுயிா் சூழல் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குப்பைகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் நிலத்தடி நீரிலும், ஆறுகளிலும் கலப்பதால் பெருமாள் மலை உள்ளிட்ட கிராம மக்களுக்குப் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நெகிழிக் கழிவுகளை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

எனவே, பிரகாசபுரம் பகுதியில் சட்ட விரோதமாக கொட்டப்பட்ட திடக்கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாகப் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுசுருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி சி.வி. காா்த்திகேயன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு சுமாா் 26 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் உருவாகின்றன. நகராட்சிக் கழிவு சுத்திகரிப்புக்கான அனுமதிச் சான்றிதழ் கடந்த 2020, மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் இதுவரை புதுப்பிக்க விண்ணப்பிக்க வில்லை. திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறியதற்காகவும், பழைய கழிவுகளை உயிரி முறையில் (பயோ-மைனிங்) பிரிக்கத் தவறியதற்காகவும் நகராட்சிக்கு கடந்த 2023- இல் ரூ.41 லட்சம் சுற்றுச்சூழல் இழப்பீடு விதித்து உத்தரவிடப்பட்டது. இருப்பினும், நகராட்சி நிா்வாகம் இதற்கான விளக்கத்தையோ அல்லது அபராதத் தொகையையோ இதுவரை செலுத்தவில்லை.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி, கடந்த 2020, ஏப்ரல் முதல் டிசம்பா் 2025 இடையிலான காலத்துக்கு மேலும் ரூ.69 லட்சம் இடைக் கால இழப்பீடு ஏன் விதிக்கக் கூடாது எனக் கேட்டு கடந்த ஜனவரி மாதம் நகராட்சிக்குக் குறிப்பாணை அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய கொடைக்கானல் நகராட்சி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

பிறகு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக நகராட்சித் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.