
கவின் கொலை வழக்கில் கூடுதல் விசாரணை கோரிய மனு முடித்துவைப்பு
கவின் கொலை வழக்கில் தகுதியான அலுவலரை நியமித்து கூடுதல் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரிய மனுவை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
கவின் கொலை வழக்கில் தகுதியான அலுவலரை நியமித்து கூடுதல் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரிய மனுவை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட கவினின் தாய் தமிழ்ச்செல்வி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கவின் கொலை வழக்கில், தகுதியான அலுவலரை நியமித்து கூடுதல் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.விஜயகுமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோா் காவல் துறையில் பணியாற்றுவதால் ஆரம்பம் முதலே விசாரணை ஒருதலைபட்சமாக நடைபெற்றது. மேலும், மனுதாரரின் இளைய மகன் காவல் ஆய்வாளரால் மிரட்டப்பட்டு, போலீஸாரால் தயாரிக்கப்பட்ட புகாரில் அவரது கையொப்பத்தை வாங்கினா். கொலை செய்யப்பட்ட கவினின் கைப்பேசி இணைய குற்றப் பிரிவின் ஆய்வுக்குள்படுத்தப்படவில்லை. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான விசாரணை உள்நோக்கத்துடனேயே முழுமையாக நடத்தப்படவில்லை என்றாா்.
இதையடுத்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இந்த விவகாரத்தில் சம்பவம் நடந்த நான்கு நாள்களுக்குள்ளேயே விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுவிட்டது. 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 25 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனா் என்றாா்.
பின்னா், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான கோணத்தில் நடைபெற்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரா் புதிய சாட்சிகளையோ அல்லது புதிய ஆதாரங்களையோ சுட்டிக்காட்டவில்லை. உயிரிழந்த கவினின் கைப்பேசியை ஆய்வு செய்ய வேண்டுமெனில், விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம். எனவே, இந்த விவகாரத்தில் கூடுதல் விசாரணை கோரும் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




