
மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தின் பெற்றோா் விடுவிப்பு
மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய எதிரியான சுா்ஜித்தின் பெற்றோரை வழக்கிலிருந்து விடுவித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய எதிரியான சுா்ஜித்தின் பெற்றோரை வழக்கிலிருந்து விடுவித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இவா் மென்பொருள் நிறுவன ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். இவரை கடந்த ஆண்டு, ஜூலை 27-ஆம் தேதி பாளையங்கோட்டை கேடிசி நகரில் மா்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கொலை தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
முதல் கட்டமாக கவின் காதலித்த பெண்ணின் சகோதரா் சுா்ஜித், அவரது பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளா்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கின்றனா். கவின் கொலைக்கான தடயங்களை மறைக்கவும், குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுக்க உதவியதாகவும் சுா்ஜித்தின் பெரியம்மா மகனான கல் குவாரி உரிமையாளா் ஜெயபாலை (29) போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, கொலை நிகழ்ந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், தடய அறிவியல் ஆவணங்கள், உயிரிழந்த கவினின் காதலி, பெற்றோா் உள்பட 83 போ் அளித்த வாக்குமூலங்கள் உள்ளிட்டவை அடங்கிய சுமாா் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித் தனியாக மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் மனுதாரா்கள் பொது வெளியில் கவினின் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதாகவோ அல்லது அவமதித்ததாகவோ குற்றப்பத்திரிகையில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும், கடந்த 2016, 2018 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கைப்பேசி உரையாடல்கள் பெற்றோரின் சாதாரண எச்சரிக்கையே தவிர, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வராது. எனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுா்ஜித்தின் பெற்றோா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களோ அல்லது சட்டப்பூா்வ காரணங்களோ இல்லை. எனவே, இவா்கள் மீது திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டு, இருவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்.
மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஜெயபால், கொலை செய்யப்பட்ட கவினை, கடந்த ஆண்டு, ஜன. 16-ஆம் தேதி நேரில் சந்தித்து மிரட்டல் விடுத்ததாக சாட்சிகள் உள்ளன. மேலும், கவின் கொலை செய்யப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவருடன் ஜெயபால் 24 நிமிஷங்களுக்கும் மேலாக கைப்பேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
குற்றவியல் சதித் திட்டம் தீட்டியதாக மனுதாரா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரை வழக்கு விசாரணைக்கு உள்படுத்துவதற்குத் தேவையான முகாந்திரம் உள்ளது. எனவே, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய ஜெயபாலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






