/

கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் அபாயத்தில் சேட் இப்ராகிம் நகர்

ராமநாதபுரம்,ஜன 10:  முறையான வடிகால் வசதியின்றி,கழிவுநீர் வெளியேறாமல் தேங்கிக் கிடப்பதால்,ராமநாதபுரம் சேட் இப்ராகிம் நகர் பகுதி மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.  ராமநாதபுரம் ஊராட்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:43 am

எஸ்.வி.எஸ்.ஜெக​ஜோதி.

ராமநாதபுரம்,ஜன 10:  முறையான வடிகால் வசதியின்றி,கழிவுநீர் வெளியேறாமல் தேங்கிக் கிடப்பதால்,ராமநாதபுரம் சேட் இப்ராகிம் நகர் பகுதி மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

 ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்டது சேட் இப்ராகிம் நகர். ஊராட்சி ஒன்றிய எல்கைக்கு உட்பட்டதாக இருந்தாலும், மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில், ராமநாதபுரம் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் சேட் இப்ராகிம் நகர் உள்ளது.

இந்நகரில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலும் மருத்துவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.

 இப்பகுதி வீடுகளில் உபயோகிக்கும் நீர், வெளியேற வழியின்றி பாதைகளில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால், தொற்றுநோய் கிருமிகள், புழு, பூச்சிகள், தண்ணீர் பாம்புகள் உற்பத்தியாகி சுகாதாரக் கேடு நிலவுகிறது.

 இப்பகுதியில் பலர் சிக்குன் குனியா உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கழிவுநீருடன், சாக்கடை நீரும் சேர்வதால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

 இந்நகர் உருவாக்கப்படும்போது, கழிவுநீர் வெளியேற வசதி செய்யப்படவில்லை.  இதனால், காலியான வீட்டுமனைகளில் கழிவுநீர் தேங்குகிறது. வசதியான சிலர் தங்கள் வீடுகளின் முன் தேங்கும் கழிவுநீரை டிராக்டர்கள் மூலம் வெளியேற்றுகின்றனர்.

இதுகுறித்து இந்நகரைச் சேர்ந்த ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர்

மை.அப்துல்சலாம் கூறியதாவது:

 1988-ல் சேட் இப்ராகிம் நகர் உருவானது. இப்பகுதியில் வீடுகளில் உள்ள கழிவுநீர் வெளியேறும் வகையில், வடிகால் வசதி எதுவும் செய்யப்படவில்லை. மிகவும் பள்ளமான பகுதியாக இருப்பதால் கழிவுநீர் தேங்குகிறது. மழைக் காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகி, வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது.

 நகர் முழுவதும் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால், நோய்க் கிருமிகளை உற்பத்தி செய்யும் இடமாக இப்பகுதி உள்ளது. கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது.

கடந்த 22 ஆண்டுகளாக,இப்பகுதியில் சாலை வசதியும் செய்து தரப்படவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் போடப்பட்ட 20 அடி சாலை, தற்போது முற்றிலும் சேதமடைந்து காணாமல் போய்விட்டது.

இப்பகுதியில் குடியிருப்போர் வீடுகளுக்கு, உறவினர்கள் கூட வர அச்சப்படுகின்றனர்.

இப்பகுதியில் சென்ட் விலை ரூ. 5 லட்சம் வரை விற்பதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் கழிவுநீர் தேங்கும் பிரச்னை, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் வெளியேற வாய்க்கால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.