ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை செவ்வாய்க்கிழமை இரவு கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் மகன் மகாலிங்கம்(34). இவர் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ராமேசுவரம் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையில் வேலை செய்து வந்தார். புதன்கிழமை பேருந்து நிலையத்துக்குள் வந்த கார் ஒன்று திடீரென கட்டண கழிப்பறைக் கட்டடம் மீது மோதியது. இதில் கட்டணக் கழிப்பறை அருகே தூங்கிக் கொண்டிருந்த மகாலிங்கம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரின் ஓட்டுநர் உடனடியாக காரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரான ராமநாதபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மாரி மகன் நவீனை(20)தேடி வருகின்றனர்.