ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கி கிளைகளின் மூலம் வளம் சார்ந்த கடன்கள் வழங்க ரூ.3,782.89 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற வங்கியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் இந்த நிதியாண்டுக்கான வங்கிக்கடன் திட்ட அறிக்கையின் கையேட்டினை அவர் வெளியிட்டு பேசியதாவது:
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்நிதியாண்டில் வளம் சார்ந்த வங்கிக்கடன் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட அறிக்கையின் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கி கிளைகளின் மூலம் வளம் சார்ந்த கடன்கள் வழங்க ரூ.3,782.89 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கானது
கடந்த ஆண்டை விட 9.2 சதவிகிதம் அதிகமாகும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வருடாந்திர கடன் திட்ட வரைவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் கடன் உதவிகள் வழங்க ரூ.1,618.22 கோடி, வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு கடனுதவி வழங்க ரூ.604.20 கோடி, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக ரூ.168.05 கோடி, விவசாய கட்டமைப்புக்காக ரூ.86.50 கோடி, உணவு பதப்படுத்த ரூ.127.08 கோடி, ஏற்றுமதி திட்டங்களுக்கு ரூ.42 கோடி, கல்வி வளர்ச்சிக்காக ரூ.360 கோடி, புதிய வீடுகள் கட்ட ரூ.372 கோடி, மீள் சக்திக்கு ரூ.20.21 கோடி, சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.47.03 கோடி, இதர முன்னோடி திட்டங்களுக்காக ரூ.337.60 கோடி ஆக மொத்தம் ரூ.3,782.89 கோடி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு வரைவு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்துக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் பி.உமா மகேசுவரி,ரிசர்வ் வங்கி உதவிப் பொதுமேலாளர் ந.ஜெயச்சந்திரன், பாண்டியன் கிராம வங்கியின் தூத்துக்குடி மண்டல முதன்மை மேலாளர் தெய்வநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன், மாவட்டமுன்னோடி வங்கி மேலாளர் ஆர்.ஷியாமளாநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் சி.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.