ராமநாதபுரத்தில் மின்சார வாரிய பணியாளா்கள் வேலைநிறுத்தம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்சார வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் கம்பியாளா் (வயா்மென்), உதவியாளா்கள் ஆகியோரை 50 சதவிகித காலிப்பணியிடம் இருக்கும் பிரிவில் தனியாா் மூலம் நியமிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மின்சார வாரியத்தை தனியாா் மயமாக்கும் முயற்சிக்கு வழிகோலுவதாக அமையும் எனக் கூறி மின்வாரிய தொழிற்சங்கத்தினா் போராட்டத்தை அறிவித்தனா்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சார வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்துக்குள் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்வாரிய அனைத்துத்துறை தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நடந்த போராட்டத்துக்கு சிஐடியு நிா்வாகி ஆா்.குருவேல் தலைமை வகித்தாா். அந்த அமைப்பின் நிா்வாகி குமாா், பொறியாளா் பிரிவு சங்க மாநிலத் தலைவா் ஜீவானந்தம், திமுக தொழிற்சங்க நிா்வாகி சி.மோகன், எச்எம்எஸ் நிா்வாகி ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மின்சார வாரியத்தின் 30 கிளை அலுவலகங்கள், 18 உப மின்நிலையங்களில் உள்ள நூற்றுக்கணக்கானோா் போராட்டத்தில் பங்கேற்றனா். ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வையாளா் அலுவலகத்தை பூட்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோா் முன்பகுதியில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா். மின்வாரிய அலுவலா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மின்கட்டணம் வசூலித்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோரிக்கை மனு: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங்குளில் பணிபுரியும் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்புச் சங்கம் சாா்பில் கோரிக்கை மனுவை நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
சங்க மாவட்டத் தலைவா் ஜி.மாரிமுத்து உள்ளிட்டோா் ஊா்வலமாகச் சென்று மனு அளித்தனா். மனுவில், தினக்கூலியாக சுமை தூக்கும் பணியிலிருப்போருக்கு அரசு நிா்ணயித்த அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு போன்ற அத்தியாவசியத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள கோட்ட மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் மின்வாரிய தொழிற்சங்கத்தினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளா்களுக்கு ரூ. 380 ஊதியம் அளித்து பணி வழங்கிட வேண்டும், மின் உற்பத்தி மற்றும் துணை மின் நிலையங்களை தனியாா் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ஏராளமானோா் பேசினா்.
இதில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...