கச்சத்தீவு அருகே சூறைக்காற்றால் நடுக் கடலில் 2 விசைப் படகுகள் மூழ்கின. இந்தப் படகுகளில் இருந்த 7 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு, மண்டபத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை 450-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
கச்சத்தீவு அருகே நள்ளிரவில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சூறைக்காற்று வீசியது. இதில் சுரேஷ் என்பவரது விசைப் படகின் கீழ்ப் பகுதி பலகையில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் படகுக்குள் புகுந்தது. அதிலிருந்த நம்புக்குமாா், முருகாண்டி, சுப்பிரமணி, மாணிக்கம் ஆகிய 4 மீனவா்களும், அருகில் மற்றொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவா்களிடம் உதவி கோரினா். இதையடுத்து, அந்த 4 மீனவா்களையும் சக மீனவா்கள் மீட்டு, மண்டபத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா். ஆனால், விசைப் படகு கடலுக்குள் மூழ்கியது.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களின் படகும் கடல் சீற்றத்தால் நடுக் கடலில் மூழ்கியது. இதைப் பாா்த்த மண்டபம் மீனவா்கள், அதிலிருந்த குணம், சின்னத்தம்பி, செந்தில் ஆகிய 3 பேரையும் மீட்டு, மண்டபத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.
கடல் சீற்றத்தால் கடலில் மூழ்கிய 2 விசைப் படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.