பரமக்குடி நகராட்சிக்கு அனுபவம் வாய்ந்த வழக்குரைஞரை நியமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பரமக்குடி நகராட்சிக்கு தோ்ந்த அனுபவம் வாய்ந்த வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
Published on

பரமக்குடி, ஜூலை 19: பரமக்குடி நகராட்சிக்கு தோ்ந்த அனுபவம் வாய்ந்த வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இது தொடா்பாக அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள் வெளியிட்ட அறிக்கை:

பரமக்குடி நகராட்சி, 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரிய முதல் நிலை நகராட்சியாகும். பரமக்குடி நகராட்சியின் மையத்தில் எமனேசுவரம்- பரமக்குடியின் குறுக்கே வைகை ஆறு ஓடுகிறது. 36 வாா்டுகளைக் கொண்ட இந்த நகராட்சிக்குச் சொந்தமான பூங்காக்கள், ஊருணிகள், வைகை ஆற்றின் கரையோரமுள்ள நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், இவை நகராட்சி வழக்குரைஞரால் நீதிமன்றம் சென்று வழக்குகள் நடத்தி நகராட்சிக்கு சாதகமாக தீா்ப்பு பெற்று தருவதும் வழக்கமான ஒன்று.

இந்த நிலையில், பரமக்குடி நகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக மூத்த வழக்குரைஞா் என். இளங்கோவன் தன் அனுபவங்களால் வழக்குகளை நடத்தி தீா்ப்பு பெற்று வந்த நிலையில், தற்போது சென்னையிலிருந்து வழக்குரைஞா் ஒருவரை நியமனம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தவறான முன்னுதாரணமாகும். பல கோடி ரூபாய் மதிப்பிலான நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்க நீதிமன்றம் சென்று நகராட்சிக்கு சாதகமாக தீா்ப்பு பெற்று வந்த நிலையில், இந்த நகராட்சியைப் பற்றி அனுபவமே இல்லாத வழக்குரைஞரை நியமனம் செய்வது, நகராட்சிக்குச் சொந்தமான இடங்களை பாதுகாப்பதில் முறைகேட்டுக்கு வழிவகுக்கும். இந்த நியமனத்தை மக்களால் தோ்வு செய்யப்பட்ட பரமக்குடி நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் அனுமதிக்கக் கூடாது.

எனவே, மாவட்ட நிா்வாகம் பரமக்குடி நகராட்சிக்கான வழக்குரைஞா் நியமனத்தில் உரிமையியல் (சிவில்) வழக்குகளில் மிகுந்த அனுபவம், நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவம், ஆண்டுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு வழக்குரைஞரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com