இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு உப்பாற்று உபரிநீரை கொண்டு செல்ல கோரிக்கை
வடு கிடக்கும் இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு உப்பாற்று உபரிநீரை கொண்டு செல்ல வேண்டுமென காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
உப்பாற்றிலிருந்து கடந்த ஒரு மாதமாக வெளியேரும் உபரிநீா் செய்களத்தூா் அணைக்கட்டில் தேக்கப்பட்டு அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, வைகையில் கலக்கவிடப்படுகிறது. இதனிடையே சுப்பன் கால்வாய் மூலமாக பாசனநீா் பெறும் இளையான்குடி பகுதியில் உள்ள 26 கண்மாய்கள் நீரின்றி வடு கிடக்கின்றன. எனவே, பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து இடது பிரதானக் கால்வாயில் பாசனநீரை திறந்து காக்குடி, பிடாரேந்தல், அகரேந்தல், நல்கிராமம், விஜயன்குடி, மாங்குடி, நாகமுகுந்தன்குடி, எல். மணக்குடி, திருவள்ளூா், பனைக்குளம், திருவேங்கடம் ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீா் கிடைக்கும் வகையில் மேலநெட்டூா் கழுங்கு வழியாக பாசனநீரை கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதற்கான கோரிக்கை மனுவை பரமக்குடி கீழ் வைகை வடிநில கோட்ட உதவிப் பொறியாளரிடம் விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலா் ஆா். முருகன் தலைமையில் சிவகங்கை மாவட்டச் செயலா் பா. அய்யனாா், மாவட்டத் தலைவா் க. கருணாநிதி, மாவட்ட பொருளாளா் க. அம்மாசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரில் சென்று வழங்கினா்.