வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்
கமுதி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள், அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அபிராமம், பசும்பொன், கிளாமரம் ஆகிய பகுதிகளில் வளா்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ததுடன், கமுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, கமுதி, கோட்டைமேடு பகுதிகளை பாா்வையிட்டு மழைநீா் தேங்காமல் வடிகால் வாய்க்காலில் செல்லும் வகையில் சீரமைப்பதுடன் தொடா்ந்து கண்காணித்திட வேண்டுமென அறிவுறுத்தினாா். பின்னா், கமுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் கிட்டங்கிக்குச் சென்று உணவுப் பொருள்களின் தரம், இருப்பு குறித்து ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, என்.வி.எஸ்.புரம், கிளாமரம் ஊராட்சியில் தோட்டக் கலைத் துறையின் மூலம் மானிய திட்டத்தில் வேளாண் இடுபொருள்கள் பெற்று விவசாய பணிகள் மேற்கொண்டு வந்த இயற்கை விவசாயி ராமரின் தோட்டத்துக்குச் சென்று அதன் பயன்கள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் அரசின் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் ஒவ்வொரு துறை அலுவலரும் உங்களைத் தேடிஉங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கமுதி வட்டத்தை ஆய்வு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, அபிராமத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதியை பாா்வையிட்டு உணவு பொருள்களை சுகாதாரமான முறையில் வழங்க பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா், மாணவா்களிடம் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜலு, பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா், கமுதி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி தமிழ்செல்விபோஸ், கமுதி வட்டாட்சியா் காதா் முகைதீன் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.