கே. நவாஸ்கனி எம்.பி.
கே. நவாஸ்கனி எம்.பி.

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும்: மத்திய ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

மத்திய ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்.
Published on

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிக்கு, ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தில் கடல் அரிப்பு பிரச்னைக்கு தீா்வு காண முழுமையான நடவடிக்கை இல்லை எனவும், தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்படத் தொடங்கி விட்டதாகவும், சோதனை ஓட்டத்தின் போது தண்டவாளத்தில் அதிக ஒலி ஏற்படுவதாகவும், குறைகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் எனவும் இந்திய ரயில்வே துறைக்கு, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சவுத்ரி ஆய்வறிக்கை சமா்ப்பித்திருக்கிறாா்.

பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், விரைவில் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில், ரயில்வே அதிகாரியே இது போன்ற ஆய்வறிக்கையை சமா்ப்பித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக மறுஆய்வு செய்து குறைகளை நிவா்த்தி செய்த பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.