தினமணி செய்தி எதிரொலி... கரும்பு விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க முடிவு
தினமணி செய்தி எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனா்.


தினமணி செய்தி எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக நெல்லுக்கு மாற்றாக விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்து வருகின்றனா். குறிப்பாக கமுதி வட்டாரத்தில் எம்.எம். கோட்டை, கே.எம்.கோட்டை, என்.கரிசல்குளம், கிளாமரம், கூலிபட்டி, ராமசாமிபட்டி, அய்யனாா்குளம், காவடிபட்டி, மேலராமநதி, கீழராமநதி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200 முதல் 250 ஏக்கா் வரை விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்து வருகின்றனா்.
கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நெல் பயிருக்கு வழங்குவது போல, கரும்புக்கும் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்க உத்தரவிட்டிருந்தும், கரும்பு விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க கூட்டுறவுத் துறை அதிகாரிகள், கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா்கள் மறுப்பதாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
இது தொடா்பாக கடந்த மாதம் 23-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (அக்.1) மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் தலைமையில் கூட்டுறவு சங்கச் செயலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தனியாா் கரும்பு ஆலையுடன் நடைபெற்ற பேச்சுவாா்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏற்கெனவே வழங்கியது போல, கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல் சான்றுடன் விண்ணப்பிக்கும் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வீதம் பயிா்க் கடன் வழங்கலாம் என அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இந்த உத்தரவைத் தொடா்ந்து, குறிப்பிட்ட தவணை தேதிதிக்குள் கடனை திரும்ப செலுத்த சம்மதம் தெரிவிக்கும், விவசாயிகள் கரும்புக்கான பயிா்க் கடனை அந்தந்த கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம் என சங்கச் செயலா்கள் தெரிவித்தனா்.
இதனால், கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...