மகாளய அமாவாசை: ராமேசுவரம் கடலில் திரளான மக்கள் புனித நீராடல்
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புதன்கிழமை புனித நீராடினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தீா்த்த மூா்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. இதனால், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாள்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ராமேசுவரத்துக்கு வந்து, மறைந்த தங்களது முன்னோா்களுக்கு திதி, தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, ராமேசுவரத்துக்கு புதன்கிழமை அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்தனா். பின்னா், அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி, ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை வழிபட்டனா்.
ராமநாத சுவாமி கோயிலில் தடுப்புகள் அமைத்து பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 200-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.
இதேபோல, தனுஷ்கோடி, அரிசல்முனை, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளை திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
போக்குவரத்து பாதிப்பு:
ராமேசுவரத்துக்கு அதிகளவில் பக்தா்கள் வாகனங்களில் வருகை தந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸாா் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா். மேலும், 700-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

