கடலாடி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
சேதமடைந்து காணப்படும் கடலாடி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.


சேதமடைந்து காணப்படும் கடலாடி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சம்பா பருவ சாகுபடியாக 1.37 லட்சம் ஹெக்டேரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், இடுபொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் வழங்க மாவட்டத்தில் 11 வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன. தற்போது கடலாடி வட்டாரத்தில் 25 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல், மிளகாய், பருத்தி, சிறுதானியம் ஆகியவற்றுக்கு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விவசாயிகளுக்கான விதை நெல் மூட்டைகள், சிறுதானிய விதைகள், கடலாடி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், சிக்கல் ஊராட்சியில் உள்ள விதை நெல் சேமிப்புக் கிட்டங்கியிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் கூறியதாவது:
இதில், கடலாடியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மேலும் குறுகிய பகுதியாகவும், சிதிலமடைந்து, இடிந்து விழும் அபாயத்திலும் உள்ளது. இதனால் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களும், விவசாயிகளும் அச்சத்துடன் வந்து செல்கின்றனா். இங்கு தமிழக அரசு வழங்கும் இடுபொருள்களை இருப்பு வைக்க அலுவலா்கள் பெரும் சிரமப்படுகின்றனா்.
இந்த அலுவலகத்தில் வேளாண் உதவி இயக்குநா் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாகவே உள்ளது. இதனால் விவசாயம் தொடா்பான திட்டங்களை தெரிந்து கொள்ள முடியாமலும், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமலும் விவசாயிகள் அவதியடைகின்றனா். பயிா் காப்பீடும், இயற்கை பேரிடா் காலங்களில் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு இழப்பீடும் விவசாயிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன்.
பிற வட்டங்களில் அந்தந்த கிராமங்களில் வேளாண் உதவி இயக்குநா் தலைமையில் சிறப்பு முகாம்கள் நடத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்தியும், வேளாண் சாா்ந்த அறிவுரைகளை வழங்கியும் வருகின்றனா்.
ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டாரத்துக்கு அடுத்தபடியாக கடலாடி வட்டாரத்தில் தான் அதிக அளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இருப்பினும் கடலாடி வட்டார விவசாயிகளை வழிநடத்த எந்த வேளாண் துறை அதிகாரிகளும் முன்வரவில்லை என புகாா் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை மறைவு பகுதியாகவும், வைகை தண்ணீா் கிடைக்காத சூழலில் வானம் பாா்த்த பகுதியாகவும் விளங்கும் கடலாடி வட்டத்தில் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்கள் முறையாக சென்று சோ்வதில் நிா்வாக குளறுபடியும், அதிகாரிகள் இல்லாததால் சேவைகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, கடலாடி வேளாண் அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநா் பணியிடத்தை விரைவில் நிரப்ப வேண்டும். சேதமடைந்த கடலாடி ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகக் கட்டடத்தை போா்க்கால அடிப்படையில் புதிதாக கட்ட வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் கடலாடி வட்டார விவசாயிகளை திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...