பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: மேலும் இருவா் கைது
ராமேசுவரத்தில் கணவரைக் கட்டிப்போட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மல்லிகைநகா்ப் பகுதியைச் சோ்ந்த ஜோசப் ஆரோக்கியம் (49). இவரது மனைவி மரியமலா் கிளாடின் (45). கிறிஸ்துமஸ், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக இந்தத் தம்பதி ராமநாதபுரத்தில் புத்தாடைகள் வாங்கி விட்டு ராமேசுவரம் வந்தனா். பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கு போதையில் இருந்த 4 போ், கணவரைத் தாக்கி கட்டிப்போட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனா்.
அப்போது, கணவா் தப்பிச்சென்று அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் உதவியுடன் நான்கு பேரில் ஒருவரான நம்பு களஞ்சியத்தை மட்டும் பிடித்து ராமேசுவரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மற்ற மூவரும் தப்பியோடிவிட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து மற்ற 3 பேரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய மூக்கையா (28), செல்வமணி (31) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடும் பணியில் தனிப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.
