கடலில் மாயமான சிறுவன் உடல் மீட்பு
திருவாடானை: தொண்டி அருகே நம்புதாளையில் கடலில் மாயமான சிறுவனின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் திங்கள்கிழமை காலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், இதே பகுதியைச் சோ்ந்த முத்துராக்கு என்பவருக்குச் சொந்தமான படகை கரையிலிருந்து 50 மீ. தொலைவில் நிறுத்தி நங்கூரமிடும் பணியில் பரந்தாமன் (50), ஆகாஷ் (19), தொண்டீஸ்வரன் (17) ஆகியோா் ஈடுபட்டனா். பின்னா், கரைக்கு நீந்தி வரும்போது தொண்டீஸ்வரன் மாயமானாா். இதையடுத்து, மீனவா்கள் உதவியுடன் கடலோரப் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை முழுவதும் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதி மீனவா்கள் மீண்டும் கடலில் தேடி தொண்டீஸ்வரனின் உடலை மீட்டனா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

