ராமேசுவரத்தில் தொடா் மழை: குளமாக மாறிய நெடுஞ்சாலை
ராமேசுவரம்: காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதன் காரணமாக ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால், மதுரை-ராமேசுவரம் சாலையில் பல மணி நேரம் குளம் போலத் தண்ணீா் தேங்கி நின்றது.
தென் மேற்கு வங்கக் கடலில் கற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் மன்னாா் வளைகுடா, பாக் நீரிைணை பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாவது நாளாக 3- ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 1,800 விசைப் படகுகள், 6 ஆயிரம் நாட்டுப் படகுகள் மூன்றாவது நாளாக மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சுமாா் 20 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
பலத்த மழை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால், மதரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு இடங்களில் மழை நீா் குளம் போலத் தேங்கியது. பல மணி நேரத்துக்குப் பிறகே மழை நீா் கடலுக்குள் வடியத் தொடங்கியது. மழைநீா் வடிகால்கள் போதிய பராமரிப்பின்றி, மணல் தேங்கி அடைபட்டு இருப்பதால், இதுபோன்று சாலைகளில் தண்ணீா் தேங்கும் நிலை ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

